வறட்சியும், விவசாயமும்

வறட்சியை சமாளிக்க சரியான வழி, வறட்சியை தாங்கும் பயிர்களை சாகுபடி செய்வது தான். வறட்சியை தாங்கும் நெல் பயிர்களை கண்டுபிடித்து பயிரிட வேண்டும்

 

வழக்கறிஞர். கே. எஸ். இராதாகிருஷ்ணன்.

‘விவசாயம் தான் நம் நாட்டின் முதுலும்பு. விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்’என்றெல்லாம் விவசாயிகளை பற்றிய சொல்லாடல்கள் இருந்தன. விடுதலைக்கு பின்னர் நாட்டின் 70 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியே இருந்தனர். உலகமயமாதல், நகரமயமாதல், தொழில் வளர்ச்சி என்று பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் போதிய தண்ணீர் மற்றும் வங்கிகளில் கடன் கிடைக்காத காரணங்களால் தற்போது வெறும் 50 சதவீதம் பேர் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். 1991ம் ஆண்டுக்கு பிறகு விவசாயம் நலிவடையத் தொடங்கியது. வானம் பார்த்த பூமியாக உள்ள விளைநிலங்கள் தண்ணீரே இல்லாமல் வறண்டிருக்கிறது.

விவசாயத்தையே பிரதானமாக கொண்டிருக்கும் கிராமங்களில் வசிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு தேவையான தண்ணீரும், நிதியுதவியும் இல்லாததால் இளைய தலைமுறைகள் வேறு தொழிலை நோக்கி நகரத்திற்கு புலம்பெயர்ந்து விடுகின்றனர். மேலும் விவசாயத்தை மட்டுமே தொழிலாக கொண்ட மக்கள் இந்த கொடுமைகளை மேற்கொண்டு தாங்கமுடியாமல் தங்கள் இன்னுயிரை நீத்துவிடுகின்றனர். விவசாயத்தால் கிடைக்கும் தேசிய வருமானமும் 15 சதவீதம் குறைந்துள்ளது. விவசாயத்தின் மீதான முதலீடுகள் குறைந்து நலிவடைந்த தொழிலாகிவிட்டது. இப்படியான சூழ்நிலையில் அடுத்த தலைமுறையினர் சோற்றை விடுத்து பர்கர், பீட்சா போன்றவற்றை மட்டுமே சாப்பிடமுடியும் என்பதில் ஐயமில்லை.

தமிழகத்தின் விவசாய தேவைக்கான நீரை பிரதானமாக காவிரி, தாமிரபரணி, வைகை போன்ற ஆறுகளின் வழியே பெற்றோம். ஆனால் இன்றைய சூழலில் அந்த ஆறுகளில் இருந்து வருடத்தில் மழை அதிகமாக பெய்து வெள்ளம் ஏற்படும் சமயங்களில் வரும் உபரி நீரையே அண்டை மாநிலங்கள் வழங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதனால் விவசாயிகள் நிலத்தடி நீரை நம்பியே விவசாயம் செய்கின்றனர். நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உபயோகப்படுத்தியதாலும், போதிய மழையின்மையாலும், மழை நீரை சேமிக்காமல் வீணடித்ததாலும் நிலத்தடி நீர்மட்டம் மாநிலம் முழுவதும் குறைந்துகொண்டே வருகிறது. மேலும் முக்கிய நீர்நிலைகள், ஏரி, குளம் போன்றவற்றை தூர்வாரி முறையாக பராமரிக்கப்படுவதில்லை.

தமிழகத்தின் நீர்நிலைகள் தூர்வாரப்படாமலும், தொழிற்சாலைக் கழிவுகளை ஆற்றில் சுத்திகரிக்கப்படாமல் கலப்பதாலும் நீர்நிலைகள் மாசடைந்து வருகிறது. குறிப்பாக வட தமிழகத்தில் ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் போன்ற பகுதிகளில் உள்ள 750 மேற்பட்ட தோல் தொழிற்சாலை கழிவுகளால் அங்கு பாய்ந்து கொண்டிருந்த பாலாறு முற்றிலும் மாசடைந்து உலகிலேயே 4வது மிக மோசமாக மாசடைந்த ஆறு என்ற நிலையை எட்டியுள்ளது. நம்மால் ஒரு ஆற்றை உருவாக்க முடியாது. ஆனால் இருக்கும் நீர்நிலைகளையாவது முறையாக காப்பாற்ற வேண்டும். இதே போன்று தான் காவிரியின் கிளை ஆறுகளான நொய்யல், அமராவதி, பவானி போன்ற ஆறுகள் சாயப்பட்டறை கழிவுநீரால் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றை உடனடியாக சரிசெய்யாவிட்டால் எதிர்காலத்தில் மிகப்பெரிய தண்ணீர் பிரச்சனை ஏற்படுவதை தடுக்க முடியாது.

தமிழக அரசின் கீழ் செயல்படும் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரப் பிரிவின் கட்டுப்பாட்டில் தான் 89 அணைகள் உள்ளன. இவற்றை சென்னை, மதுரை, திருச்சி, பொள்ளாச்சி என 4 மண்டலங்களாக பிரித்து பராமரிக்கப்படுகிறது.

சென்னை மண்டல ஏரிகள் : பூண்டி, புழல், வீராணம், மதுராந்தகம், செம்பரம்பாக்கம், சோழவரம்,
செங்குன்றம், சாத்தனூர், கிருஷ்ணகிரி

மதுரை மதுரை மண்டல ஏரிகள்/அணைகள் : பெரியாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, மணிமுத்தாறு, வைகை, பாபநாசம்

திருச்சி அணைகள் மண்டலம் : மேட்டூர், கல்லணை

பொள்ளாச்சி மண்டல அணைகள் : பவானிசாகர், அமராவதி, பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி, சோலையாறு

பல்வேறு காலகட்டங்களில் நீர்மேலாண்மையை சிறப்பாக கையாண்டுள்ளது தமிழகம். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தேவைக்கேற்ப நமது நீர்நிலைகள் ஏற்படுத்தப்பட்டது. இதில் வீராணம், செம்பரம்பாக்கம் ஏரிகள் மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்டதாகும். ஆங்கிலேயர் காலத்தில் பூண்டி, சோழவரம், புழல் போன்ற ஏரிகளும், பெரியாறு, பேச்சிப்பாறை, மேட்டூர் போன்ற அணைகளும், விடுதலைக்கு பின் காமராஜர் காலத்தில் சாத்தனூர், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைகள் கட்டப்பட்டன.

இந்த நீர்நிலைகள் யாவும் பழைய எந்திரங்கள் கொண்டே இயக்கப்பட்டு வருகிறது. இவற்றை மாற்றிமைத்து நவீன காலத்திற்கேற்றாற்போல புதிய எந்திரங்கள் பொருத்தவும், மதகுகளை சீரமைக்கவும், பழுதான கருவிகளை சரிசெய்யவும் பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.

இவையாவும் தரவுகளின் அடிப்படையில் உள்ள தகவல்களாகும். இவையாவும் விவசாயிகள் பயனடையும் வண்ணம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க விவசாயிகளும், விவசாய அமைப்புகளும் தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றன. குறிப்பாக காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பயனடையும் வகையில் காவிரி நதிநீரை பெற முயல்வதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் நீராதாரத்தையும் நீர்நிலைகளையும் பெருக்க போதிய நடவடிக்கைகள் எடுக்க விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

வற்றாத ஜீவநதிகள் இல்லாத நம் தமிழகம் பருவமழையை நம்பியே குடிநீர் மற்றும் விவசாயத் தேவையை பூர்த்தி செய்து வருகிறோம். ஆனால் நாம் பருவமழையை சேமிக்கத் தவறிவிடுகிறோம். சேமிப்பதற்கு ஏதுவாக நீர்நிலைகளை தூர்வாருவதற்கு மாறாக, மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கிறோம். புதிய நீர்நிலைகளை உருவாக்காமல் ஏற்கனவே இருக்கும் நீர்நிலைகளையும் பராமரிக்காமல் உள்ளோம்.

தமிழகத்திற்கு வறட்சி என்பது புதிதல்ல. நாம் வறட்சியை பல்வேறு காலகட்டங்களில் அனுபவித்துள்ளோம். பாண்டிய மன்னர் காலத்தில் தொடர்ந்து 12 ஆண்டுகள் வறட்சி நிலவியதற்கான குறிப்புகளை தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம். வறட்சி என்பது ஓரிடத்தில் பெய்யும் சராசரி மழை அளவு குறையும் போது ஏற்படுகிறது. இது ஆண்டுக்கணக்கில் கூட நீடிக்கலாம். வறட்சியை விரட்ட மழை ஒன்றே தீர்வாகும். வறட்சியின் காரணமாக வேளாண்மை, பொருளாதாரம், வாழ்க்கை முறை, சுற்றுப்புறச் சூழல் போன்றவை பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

கடந்த காலங்களில் முறையாக மழைநீரை சேமிக்காத காரணங்களால் 1980ம் ஆண்டின் வறட்சியில் சுமார் 2.50 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்தன. குடிக்க கூட தண்ணீர் இல்லாத காலத்தில் நெசவுத் தொழிலும் பாதிக்கப்பட்டன. 1982ம் ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால் நெல், நிலக்கடலை போன்ற பயிர்களும், நீலகிரி மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கர் தேயிலை தோட்டங்கள் காய்ந்து போயின. தொடர்ந்து 1983ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியால் நெல், பருப்பு, சிறுதானிய உற்பத்தி என வேளாண் தொழிலே நசிவடைந்தது. மேலும் 1985ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியின் போது சேலம், தருமபுரி, திருச்சி, மதுரை, கோவை போன்ற பல மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. 1987 மற்றும் 1989 ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் சுமார் 11 மீட்டர் அளவிற்கு குறைந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.

சென்ற வருடம் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
2050ம் ஆண்டினை நெருங்கும் போது தெற்காசிய நாடுகளின் விளைச்சல் சுமார் 30% வறட்சியால் மட்டுமே பாதிப்படையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், 11 மாநிலங்களில் 278 மாவட்டங்கள் அடிக்கடி வறட்சியால் பாதிக்கப்படுகிறது. தமிழகத்தின் பாதிக்கு மேற்பட்ட மாவட்டங்கள் வறட்சி மாவட்டங்களே ஆகும்.
ஆறு, ஏரி, குளங்களை பராமரிக்காமல் மழைநீர் கடலில் கலந்துவிட்டது என்று புலம்புவது தும்பை விட்டு வாலைப் பிடிப்பதாகும்.

எனவே வறட்சியை சமாளிக்க சரியான வழி, வறட்சியை தாங்கும் பயிர்களை சாகுபடி செய்வது தான். வறட்சியை தாங்கும் நெல் பயிர்களை கண்டுபிடித்து பயிரிட வேண்டும். கம்பு, துவரை, ஆமணக்கு, கொத்தவரை, பனை, வில்வம் போன்றவற்றையும் பயிர் செய்ய முயலவேண்டும். முக்கியமாக நீர்நிலைகளை தூர்வாரி, நிலத்தடி நீரை செறிவூட்டி, மறு சுழற்சி செய்து பயன்படுத்துதல், அதிக நீர்வளம் உள்ள நதியை குறைந்த நீர்வளம் உள்ள நதியுடன் இணைத்தல், மழைநீர் சேமிப்பை கட்டாயமாக்குதல் போன்ற நடவடிக்கைகளை அரசு எடுக்கவேண்டும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *