வறட்சியும், விவசாயமும்

வறட்சியும், விவசாயமும்

வறட்சியை சமாளிக்க சரியான வழி, வறட்சியை தாங்கும் பயிர்களை சாகுபடி செய்வது தான். வறட்சியை தாங்கும் நெல் பயிர்களை கண்டுபிடித்து பயிரிட வேண்டும்

 

வழக்கறிஞர். கே. எஸ். இராதாகிருஷ்ணன்.

‘விவசாயம் தான் நம் நாட்டின் முதுலும்பு. விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்’என்றெல்லாம் விவசாயிகளை பற்றிய சொல்லாடல்கள் இருந்தன. விடுதலைக்கு பின்னர் நாட்டின் 70 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியே இருந்தனர். உலகமயமாதல், நகரமயமாதல், தொழில் வளர்ச்சி என்று பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் போதிய தண்ணீர் மற்றும் வங்கிகளில் கடன் கிடைக்காத காரணங்களால் தற்போது வெறும் 50 சதவீதம் பேர் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். 1991ம் ஆண்டுக்கு பிறகு விவசாயம் நலிவடையத் தொடங்கியது. வானம் பார்த்த பூமியாக உள்ள விளைநிலங்கள் தண்ணீரே இல்லாமல் வறண்டிருக்கிறது.

விவசாயத்தையே பிரதானமாக கொண்டிருக்கும் கிராமங்களில் வசிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு தேவையான தண்ணீரும், நிதியுதவியும் இல்லாததால் இளைய தலைமுறைகள் வேறு தொழிலை நோக்கி நகரத்திற்கு புலம்பெயர்ந்து விடுகின்றனர். மேலும் விவசாயத்தை மட்டுமே தொழிலாக கொண்ட மக்கள் இந்த கொடுமைகளை மேற்கொண்டு தாங்கமுடியாமல் தங்கள் இன்னுயிரை நீத்துவிடுகின்றனர். விவசாயத்தால் கிடைக்கும் தேசிய வருமானமும் 15 சதவீதம் குறைந்துள்ளது. விவசாயத்தின் மீதான முதலீடுகள் குறைந்து நலிவடைந்த தொழிலாகிவிட்டது. இப்படியான சூழ்நிலையில் அடுத்த தலைமுறையினர் சோற்றை விடுத்து பர்கர், பீட்சா போன்றவற்றை மட்டுமே சாப்பிடமுடியும் என்பதில் ஐயமில்லை.

தமிழகத்தின் விவசாய தேவைக்கான நீரை பிரதானமாக காவிரி, தாமிரபரணி, வைகை போன்ற ஆறுகளின் வழியே பெற்றோம். ஆனால் இன்றைய சூழலில் அந்த ஆறுகளில் இருந்து வருடத்தில் மழை அதிகமாக பெய்து வெள்ளம் ஏற்படும் சமயங்களில் வரும் உபரி நீரையே அண்டை மாநிலங்கள் வழங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதனால் விவசாயிகள் நிலத்தடி நீரை நம்பியே விவசாயம் செய்கின்றனர். நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உபயோகப்படுத்தியதாலும், போதிய மழையின்மையாலும், மழை நீரை சேமிக்காமல் வீணடித்ததாலும் நிலத்தடி நீர்மட்டம் மாநிலம் முழுவதும் குறைந்துகொண்டே வருகிறது. மேலும் முக்கிய நீர்நிலைகள், ஏரி, குளம் போன்றவற்றை தூர்வாரி முறையாக பராமரிக்கப்படுவதில்லை.

தமிழகத்தின் நீர்நிலைகள் தூர்வாரப்படாமலும், தொழிற்சாலைக் கழிவுகளை ஆற்றில் சுத்திகரிக்கப்படாமல் கலப்பதாலும் நீர்நிலைகள் மாசடைந்து வருகிறது. குறிப்பாக வட தமிழகத்தில் ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் போன்ற பகுதிகளில் உள்ள 750 மேற்பட்ட தோல் தொழிற்சாலை கழிவுகளால் அங்கு பாய்ந்து கொண்டிருந்த பாலாறு முற்றிலும் மாசடைந்து உலகிலேயே 4வது மிக மோசமாக மாசடைந்த ஆறு என்ற நிலையை எட்டியுள்ளது. நம்மால் ஒரு ஆற்றை உருவாக்க முடியாது. ஆனால் இருக்கும் நீர்நிலைகளையாவது முறையாக காப்பாற்ற வேண்டும். இதே போன்று தான் காவிரியின் கிளை ஆறுகளான நொய்யல், அமராவதி, பவானி போன்ற ஆறுகள் சாயப்பட்டறை கழிவுநீரால் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றை உடனடியாக சரிசெய்யாவிட்டால் எதிர்காலத்தில் மிகப்பெரிய தண்ணீர் பிரச்சனை ஏற்படுவதை தடுக்க முடியாது.

தமிழக அரசின் கீழ் செயல்படும் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரப் பிரிவின் கட்டுப்பாட்டில் தான் 89 அணைகள் உள்ளன. இவற்றை சென்னை, மதுரை, திருச்சி, பொள்ளாச்சி என 4 மண்டலங்களாக பிரித்து பராமரிக்கப்படுகிறது.

சென்னை மண்டல ஏரிகள் : பூண்டி, புழல், வீராணம், மதுராந்தகம், செம்பரம்பாக்கம், சோழவரம்,
செங்குன்றம், சாத்தனூர், கிருஷ்ணகிரி

மதுரை மதுரை மண்டல ஏரிகள்/அணைகள் : பெரியாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, மணிமுத்தாறு, வைகை, பாபநாசம்

திருச்சி அணைகள் மண்டலம் : மேட்டூர், கல்லணை

பொள்ளாச்சி மண்டல அணைகள் : பவானிசாகர், அமராவதி, பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி, சோலையாறு

பல்வேறு காலகட்டங்களில் நீர்மேலாண்மையை சிறப்பாக கையாண்டுள்ளது தமிழகம். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தேவைக்கேற்ப நமது நீர்நிலைகள் ஏற்படுத்தப்பட்டது. இதில் வீராணம், செம்பரம்பாக்கம் ஏரிகள் மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்டதாகும். ஆங்கிலேயர் காலத்தில் பூண்டி, சோழவரம், புழல் போன்ற ஏரிகளும், பெரியாறு, பேச்சிப்பாறை, மேட்டூர் போன்ற அணைகளும், விடுதலைக்கு பின் காமராஜர் காலத்தில் சாத்தனூர், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைகள் கட்டப்பட்டன.

இந்த நீர்நிலைகள் யாவும் பழைய எந்திரங்கள் கொண்டே இயக்கப்பட்டு வருகிறது. இவற்றை மாற்றிமைத்து நவீன காலத்திற்கேற்றாற்போல புதிய எந்திரங்கள் பொருத்தவும், மதகுகளை சீரமைக்கவும், பழுதான கருவிகளை சரிசெய்யவும் பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.

இவையாவும் தரவுகளின் அடிப்படையில் உள்ள தகவல்களாகும். இவையாவும் விவசாயிகள் பயனடையும் வண்ணம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க விவசாயிகளும், விவசாய அமைப்புகளும் தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றன. குறிப்பாக காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பயனடையும் வகையில் காவிரி நதிநீரை பெற முயல்வதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் நீராதாரத்தையும் நீர்நிலைகளையும் பெருக்க போதிய நடவடிக்கைகள் எடுக்க விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

வற்றாத ஜீவநதிகள் இல்லாத நம் தமிழகம் பருவமழையை நம்பியே குடிநீர் மற்றும் விவசாயத் தேவையை பூர்த்தி செய்து வருகிறோம். ஆனால் நாம் பருவமழையை சேமிக்கத் தவறிவிடுகிறோம். சேமிப்பதற்கு ஏதுவாக நீர்நிலைகளை தூர்வாருவதற்கு மாறாக, மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கிறோம். புதிய நீர்நிலைகளை உருவாக்காமல் ஏற்கனவே இருக்கும் நீர்நிலைகளையும் பராமரிக்காமல் உள்ளோம்.

தமிழகத்திற்கு வறட்சி என்பது புதிதல்ல. நாம் வறட்சியை பல்வேறு காலகட்டங்களில் அனுபவித்துள்ளோம். பாண்டிய மன்னர் காலத்தில் தொடர்ந்து 12 ஆண்டுகள் வறட்சி நிலவியதற்கான குறிப்புகளை தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம். வறட்சி என்பது ஓரிடத்தில் பெய்யும் சராசரி மழை அளவு குறையும் போது ஏற்படுகிறது. இது ஆண்டுக்கணக்கில் கூட நீடிக்கலாம். வறட்சியை விரட்ட மழை ஒன்றே தீர்வாகும். வறட்சியின் காரணமாக வேளாண்மை, பொருளாதாரம், வாழ்க்கை முறை, சுற்றுப்புறச் சூழல் போன்றவை பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

கடந்த காலங்களில் முறையாக மழைநீரை சேமிக்காத காரணங்களால் 1980ம் ஆண்டின் வறட்சியில் சுமார் 2.50 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்தன. குடிக்க கூட தண்ணீர் இல்லாத காலத்தில் நெசவுத் தொழிலும் பாதிக்கப்பட்டன. 1982ம் ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால் நெல், நிலக்கடலை போன்ற பயிர்களும், நீலகிரி மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கர் தேயிலை தோட்டங்கள் காய்ந்து போயின. தொடர்ந்து 1983ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியால் நெல், பருப்பு, சிறுதானிய உற்பத்தி என வேளாண் தொழிலே நசிவடைந்தது. மேலும் 1985ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியின் போது சேலம், தருமபுரி, திருச்சி, மதுரை, கோவை போன்ற பல மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. 1987 மற்றும் 1989 ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் சுமார் 11 மீட்டர் அளவிற்கு குறைந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.

சென்ற வருடம் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
2050ம் ஆண்டினை நெருங்கும் போது தெற்காசிய நாடுகளின் விளைச்சல் சுமார் 30% வறட்சியால் மட்டுமே பாதிப்படையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், 11 மாநிலங்களில் 278 மாவட்டங்கள் அடிக்கடி வறட்சியால் பாதிக்கப்படுகிறது. தமிழகத்தின் பாதிக்கு மேற்பட்ட மாவட்டங்கள் வறட்சி மாவட்டங்களே ஆகும்.
ஆறு, ஏரி, குளங்களை பராமரிக்காமல் மழைநீர் கடலில் கலந்துவிட்டது என்று புலம்புவது தும்பை விட்டு வாலைப் பிடிப்பதாகும்.

எனவே வறட்சியை சமாளிக்க சரியான வழி, வறட்சியை தாங்கும் பயிர்களை சாகுபடி செய்வது தான். வறட்சியை தாங்கும் நெல் பயிர்களை கண்டுபிடித்து பயிரிட வேண்டும். கம்பு, துவரை, ஆமணக்கு, கொத்தவரை, பனை, வில்வம் போன்றவற்றையும் பயிர் செய்ய முயலவேண்டும். முக்கியமாக நீர்நிலைகளை தூர்வாரி, நிலத்தடி நீரை செறிவூட்டி, மறு சுழற்சி செய்து பயன்படுத்துதல், அதிக நீர்வளம் உள்ள நதியை குறைந்த நீர்வளம் உள்ள நதியுடன் இணைத்தல், மழைநீர் சேமிப்பை கட்டாயமாக்குதல் போன்ற நடவடிக்கைகளை அரசு எடுக்கவேண்டும்.

விவசாய முன்னேற்றமே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு

கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியும் பணவீக்க போக்கும் பற்றி சில நாட்களுக்கு முன்பு பார்த்தோம். இன்று இந்திய விவசாயத்துறையின் வளர்ச்சி பற்றி பார்ப்போம்.

அட்டவணையை பார்க்கும் போது இந்திய விவசாயத்துறை எப்போதுமே நிலையில்லாத வளர்ச்சியுடன்தான் இருக்கிறது என்று தெரிகிறது. மற்ற துறைகளில் உள்ள ஏற்றத்தாழ்வைவிட இத்துறையில் ஏற்றத்தாழ்வு அதிகம். பாசன வசதிகள் பெருகிவிட்டன, உயர்ந்த விதைகள், அதிக உரங்கள், நவீன தொழில்நுட்பம், அதிக ஆதாரவிலைகள் என்று பல கூறப்பட்டாலும், இன்னமும் பருவமழையின் தாக்கத்திலிருந்து விவசாயம் தப்பவில்லை.

இந்த வருடம் எல் நினோ தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை குறைவாக பொழிந்து விவசாய உற்பத்தியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் 2002-03, 2008-09 ஆண்டுகளில் எல் நினோ ஏற்பட்டபோது விவசாய வளர்ச்சி முறையே -6.6%, 0.8% என்ற அளவில் இருந்தது.

தொழில் மற்றும் சேவை துறைகளில் வருவாய் நிலையாக இருக்க, விவசாய உற்பத்தி, குறிப்பாக உணவு பொருட்கள் குறையும் போதெல்லாம், பணவீக்கம் கடுமையாகும். மேலும் விவசாயத்தை இன்னும் பெரும்பகுதி மக்கள் சார்ந்திருப்பதால், இத்துறையின் சுணக்கம், விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் வருவாயைக் குறைத்து, மற்ற துறை பொருட்களின் தேவையையும் குறைத்துவிடும். எனவே, பணவீக்கத்தை கட்டுப்படுத்த, உணவு பாதுகாப்பை உறுதி செய்ய, மற்ற துறைகளின் வளர்ச்சியை மேம்படுத்த விவசாயத்துறையின் பங்களிப்பு பெருக வேண்டும்.

விவசாயமும், அதனுடன் ஒப்பிடக்கூடிய மீன், கால்நடை, போன்ற துறைகளின் அமைப்பை பார்க்கும்போது, பிரச்சினைகளை கையாள்வதில் உள்ள சிக்கல் புரியும். விவசாய உற்பத்தி முழுக்க முழுக்க தனியார் துறை சார்ந்தது.

எனவே இதில் உற்பத்தியை தனி விவசாயி மட்டுமே நிர்ணயிக்க வேண்டும். ஆனால் இத்துறையைச் சுற்றியுள்ள பலவற்றை அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. பாசனவசதி, மின்சாரம், உரமானியம், உணவு தானியங்களின் ஆதார விலைகள், உணவு கையிருப்பு, போன்றவற்றை மத்திய மாநில அரசுகள் செய்யவேண்டும். இந்த அரசுகளின் முடிவுகளின் அடிப்படையில்தான் விவசாயி உற்பத்தி செய்வதை நிர்ணயிக்கிறார்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக, விவசாயத்துறையில், குறிப்பாக பாசன வசதியை மேம்படுத்துவதில் அரசின் முதலீடு குறைந்துள்ளது. இதனை ஈடு செய்ய தனியார் துறை விவசாயிகள் ஆழ்துளை கிணறுகளிலும் அதற்கான பம்புகளிலும் முதலீடு செய்துள்ளனர். சேமிப்பு கிடங்குகள் உருவாக்குவதில் அரசின் கவனம் இல்லை. தனியார் துறையிலும் இதற்கு போதுமான முதலீடு இல்லை.

எனவே, உற்பத்திக்கு பிறகான மதிப்பு கூட்டல் நடைபெறாமல், விவசாய உற்பத்தி பயனில்லாமல் போகிறது. அதே நேரத்தில், சந்தையை ஒழுங்கு படுத்துவதிலும் பல சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக காய், கனிகளின் மொத்த வியாபார சந்தைகள் நாட்டின் ஒரு சில இடங்களில் இருக்க, அங்குள்ள வியாபாரிகள் அவற்றை கட்டுப்படுத்த, விவசாயியும் பயனடையவில்லை, நுகர்வோரும் பொருளை பெறவில்லை. புது சிந்தனையுடன், விவசாய பொருட்களின் சந்தைகளை மாற்றிஅமைக்கவேண்டும்.

இது தொடர்பான சட்டங்கள், மத்திய மாநில அரசுகளால் திருத்தப்பட்டு, விவசாயின் நன்மையை மையமாகக்கொண்டு சந்தையை ஒழுங்குபடுத்தவேண்டும். எனவே மத்திய மாநில அரசுகள் ஒன்றாக இணைந்து செயல்பட்டால்தான் விவசாயத்துறை பிரச்சினைகளை தீர்க்கமுடியும். குஜராத்தில் விவசாய வளர்ச்சியை உயர்த்தியதாக கூறும் மோடி, மத்திய அரசின் செயல்பாட்டுடன், மாநில அரசுகளின் ஒத்துழைப்பையும் பெற்றால் மட்டுமே இந்திய விவசாயத்துறையை உயர்த்தமுடியும்.

விவசாயத்துறைக்கு அதிக நிதி ஒதுக்குவது என்பது ஆரம்பம்தான், திட்டங்கள் முழு பயனளிக்கவேண்டுமெனில், அது மாநில அரசுகளின் ஒத்துழைப்பினால் மட்டுமே முடியும். மாநிலங்களுக்கிடையே உள்ள நதி நீர் பிரச்சினைகளும் இதில் சேர்ந்துள்ளன

ஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை

நான்கடி அகலம், ஆறடி நீளம், மூன்றடி ஆழத்தில் அருகருகே 10 குழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இக்குழி ஒரு டன் கழிவுகளைக் கொள்ளும் அளவில் இருக்கும். 750 கிலோ தாவரக்கழிவுகள், 250 கிலோ கால்நடைக் கழிவுகள் ஆகியவற்றை எடுத்து நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். 36 லிட்டர் தண்ணீரில் 38 மில்லி இ.எம் ஊற்றி நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இ.எம் கிடைக்காத நிலையில் ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 36 லிட்டர் தண்ணீரில் கலந்துகொள்ளலாம்.

கழிவுகள் கலந்த கலவையை முதல் குழிக்குள் அரையடி ஆழத்துக்கு நிரப்ப வேண்டும். நுண்ணுயிர்கள் கலந்த தண்ணீரை 6 லிட்டர் அளவுக்கு, கழிவுகள் மீது தெளிக்க வேண்டும். மீண்டும் அரையடி உயரத்துக்குக் கழிவுகள், அதன் மீது 6 லிட்டர் நுண்ணுயிர்கள் கலந்த நீர் என அடுக்கடுக்காக அமைக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது, மூன்றடி ஆழமுள்ள குழியில் ஆறு அடுக்குகள் வரை போடலாம். இப்படிக் குழியை நிரப்பி, ’வினைல் ஷீட்’ கொண்டு மூடி, ஷீட் நகராத அளவுக்கு அதன் மீது மண்ணைப் போட்டு விட வேண்டும். அதாவது, குழிக்குள் காற்று புகாதவாறு மூடிவிட வேண்டும். இதே முறையில், மொத்தம் ஒன்பது குழிகளை நிரப்ப வேண்டும். பத்தாவது குழி காலியாக இருக்க வேண்டும்.

15 நாள் கழித்து, ஒன்பதாவது குழியில் இருக்கும் கழிவுகளை வெட்டி எடுத்து பத்தாவது குழியில் நிரப்பி, காற்றுப்போகாமல் மூடி வைக்க வேண்டும். அடுத்து எட்டாவது குழியில் இருக்கும் கழிவை ஒன்பதாவது குழியில் கொட்டி மூட வேண்டும். இப்படி அனைத்துக் குழிகளிலும் உள்ள கழிவுகளையும் குழி மாற்றும்போது அவை புரட்டப்பட்டுவிடும். அடுத்த 15 நாள்களில் இந்தக் குழிகளில் இருக்கும் கழிவுகள் நன்றாக மட்கி உரமாக மாறிவிடும்.

நாம் மொத்தம் 9 ஆயிரம் கிலோ (9 டன்) கழிவுகளைக் கொட்டியிருந்தாலும், உரமாக எடுக்கும் போது, 8,100 கிலோ ( 8.1 டன்) அளவில் கிடைக்கும்.

எள் பயிரிட்டால் கூடுதல் லாபம்!

தமிழ்நாட்டில் தற்போது பல மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ள போதிலும் மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் போதிய அளவு மழை பெய்யவில்லை.

ஏரிகளில் இன்னும் பாதியளவு கூட நீர் இருப்பு இல்லாத நிலையே காணப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் விவசாயிகள் தங்கள் வயல்களில் எண்ணெய் வித்துப் பயிரான எள்ளைப் பயிரிட்டால் அது நிலைத்து நின்று, குறைந்த நீரிலும் அதிக மகசூலைக் கொடுத்து வருமானம் தரும் என வேளாண்மைத் துறையினர் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டார வேளாண் உதவி அலுவலர் சி.முரளி கூறுகையில் எள் பயிரிடுவது விவசாயிகளுக்கு செலவில்லாமல் லாபம் தரும் என்றார். எள் பயிரிடும் முறைகள் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
எள் விதைக்க கார்த்திகை மாதம் ஏற்றது. டிசம்பர்-ஜனவரி மாதங்களில் கோ-1, டிஎம்வி 3, 5, 7, எஸ்விபிஆர் 1, விஆர்ஐ (எஸ்வி) 2 ஆகியவை நல்ல ரகங்களாகும். இந்த ரகங்களின் வயது 85 முதல் 90 நாள்கள். இதில் கோ-1 மையத் தண்டு நீண்ட கிளைகளையும் குறைந்த கணுவிடைப் பகுதிகளையும் கொண்டது. இதன் விதைகள் கருப்பு நிறமாக இருக்கும். டிஎம்வி 3 மற்றும் டிஎம்பி 4 இரண்டுமே நன்கு கிளைத்த புதர்செடி போன்ற தோற்றத்தை உடையது. டிஎம்வி 5 நேரான நடுத்தரமான கிளைகளைக் கொண்டது. இதன் விதைகள் பழுப்பு நிறமாக இருக்கும்.
நிலம் தயாரித்தல்: மணற்பாங்கான வண்டல் செம்மண் மற்றும் கருவண்டல் நிலங்கள் ஏற்றவை. நிலத்தை இருமுறை டிராக்டர் கலப்பையால் (அல்லது) மூன்று முறை இரும்புக் கலப்பையால் (அல்லது) ஐந்து முறை நாட்டுக் கலப்பையால் உழ வேண்டும். சிறு விதைகளும் முளைக்குமாறு மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து நுண்மைப்படுத்த வேண்டும். மண்ணில் உள்ள கடினமான கட்டிகளை உடைக்க உளிக்கலப்பை கொண்டு 0.5 ஆழத்தில் இருந்து செங்குத்தான திசைகளில் உழ வேண்டும். பிறகு 12.5 டன் தொழு உரம் (அல்லது) மக்கிய தென்னை நார்க்
கழிவு போட வேண்டும். இறவை எள் சாகுபடிக்கு கிடைக்கும் நீர் மற்றும் நிலத்தின் சரிவைப் பொறுத்து 10 சதுரமீட்டர் அல்லது 20 சதுர மீட்டர் அளவுக்கு படுக்கை தயாரிக்க வேண்டும். ஹெக்டேருக்கு 5 கிலோ விதை தேவைப்படும்.
விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும். விதைப்புக்கு முன் விதைநேர்த்தி செய்ய வேண்டும். நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை பூசணக் கொல்லியுடன் விதை நேர்த்தி செய்யக்கூடாது. ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் திரம் (அல்லது) 2 கிராம் கார்பன்டாசிம் கொண்டு விதை நேர்த்தி செய்தல் வேண்டும்.
விதைக்கும் முறை: விதைகளை வரிசையில் விதைக்க வேண்டும். விதையின் அளவில் நான்கு மடங்கு மணலுடன் விதையைக் கலந்து நிலத்தின் மேற்பரப்பில் சீராகத் தூவ வேண்டும். 3 செ.மீ ஆழத்தில் விதைகளை விதைத்து மண் கொண்டு மூட வேண்டும்.
இடைவெளி: வரிசைக்கு வரிசை 30 செ.மீ. இடைவெளியும் செடிக்கு செடி 30 செ.மீ இடைவெளியும் கொடுக்க வேண்டும். நெல் தரிசில் விதைகளை வீசி விதைக்க வேண்டும். பின்னர் ஒரு சதுர மீட்டருக்கு 11 செடிகள் வீதம் பயிர் கலைத்தல் அவசியம்.
உரம்: ஹெக்டேருக்கு 12.5 டன் மக்கிய தொழு உரத்தை கடைசி உழவுக்கு முன் இடவும். ரசாயன உரம் என்றால் மண் பரிசோதனைப்படி உரமிடுதல் சிறந்தது. அவ்வாறு செய்யாவிட்டால் பொதுவான பரிந்துரையைப் பின்பற்ற வேண்டும்.
மானாவாரியாக இருந்தால் ஹெக்டேருக்கு 23:13:13 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து (அ) 17:13:13 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துடன் 3 பாக்கெட் அசோஸ்பைரில்லம் (ஹெக்டேருக்கு 600 கிராம்) மற்றும் 3 பாக்கெட் (ஹெக்டேருக்கு 600 கிராம்) பாஸ்போபாக்டீரியா(அ) 6 பாக்கெட் அசோபாஸை (ஹெக்டேருக்கு 1200 கிராம்) இட வேண்டும்.
இறவையில் ஹெக்டேருக்கு 35:23:23 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து (அ) 21:23:23 கிலோ தழை மணி சாம்பல் சத்துடன் 3 பாக்கெட் அசோஸ் பைரில்லம் (ஹெக்டேருக்கு 600 கிராம்) மற்றும் 3 பாக்கெட் (ஹெக்டேருக்கு 600 கிராம்) பாஸ்போபாக்டீரியா (அ) 6 பாக்கெட் அசோபாஸை (ஹெக்டேருக்கு 1200 கிராம்) இட வேண்டும்.
தழை, மணி, சாம்பல் சத்து முழுவதையும் அடியுரமாக அளிக்க வேண்டும். ஹெக்டேருக்கு 5 கிலோ மாங்கனீஸ் சல்பேட்டை சேர்த்துக் கொள்ள வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட 100 சதவீத தழை, மணி, சாம்பல் சத்தை அளித்த நிலக்கடலைப் பயிரை தொடர்ந்து இறவை எள் பயிரிடும்போது, பரிந்துரைக்கப்பட்ட உரங்களில் தழைச்சத்து முழுவதையும் 50 சதவீத மணிசத்து மற்றும் சாம்பல் சத்தையும் இட வேண்டும்.
30 செ.மீ இடைவெளியில் 5 செ.மீ ஆழத்தில் வாய்க்கால் தோண்டி உரக்கலவையினை அதில் இட்டு, 3 செ.மீ ஆழத்திற்கு மண் கொண்டு மூட வேண்டும். இவ்வாறு வாய்க்காலில் இடவில்லையெனில் உரங்களை சீராக படுக்கையின் மீது தூவ வேண்டும். விதைத்த 15 நாள்கள் கழித்து கைக்களையும், 35 நாள்கள் கழித்து இரண்டாவது கைக்களையும் எடுத்து களைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
எள்ளிற்கு மண்ணின் தன்மை, பருவகாலம் ஆகியவற்றைப் பொறுத்து சுமார் 5 அல்லது 6 முறை நீர்பாய்ச்ச வேண்டும். முதல் முறை விதை விதைத்தவுடன் 7-ஆவது நாள் உயிர்த் தண்ணீர், 25-ஆவது நாள் பூக்கும் தருவாயில் 2 முறை, காய் பிடிக்கும் தருவாயிலும் முதிர்ச்சியடையும் போதும் 2 முறையாக 6 தடவை நீர்பாய்ச்ச வேண்டும். பூப்பூக்கும் பருவம், காய் பிடித்து முற்றும் பருவத்தில் நீர் பாய்ச்சுவதை கவனமாக கடைப்பிடிக்க வேண்டும். இறவைப் பயிரில் விதைத்த 65 நாள்களுக்குப் பின் நீர்பாய்ச்சக் கூடாது.
அறுவடைக்கான அறிகுறிகள்:
செடியில் கீழிருந்து 25 சதவீத இலைகள் உதிர்ந்து விடும். காய்கள் மற்றும் தண்டுபாகங்கள் பழுப்பு நிறமாக மாறும். செடியின் அடியிலிருந்து மேலாக உள்ள 10-ஆவது காயில் உள்ள விதைகள் கருப்பாக (முதிர்வு) மாறியிருக்கும். மேற்கண்ட அறிகுறிகள் தென்படும்போது அறுவடை செய்துவிட வேண்டும். தவறினால் காய்கள் வெடித்துச் சிதறி மகசூல் குறையும்.
எள்ளைப் பொருத்தவரை தற்போதைய காலகட்டத்தில் வியாபாரிகளே கிராமங்களுக்கு வந்து கொள்முதல் செய்கின்றனர். மேலும் அருகில் உள்ள பெரிய நகரங்களுக்கு நாம் சென்று விற்கும்போது கூடுதல் விலை கிடைக்கலாம். எனவே தற்போதைய சூழ்நிலையில் விவசாயிகள் எள்ளைப் பயிரிட்டு பயன்பெறலாம்.
மேலும் இப்பயிர் குறித்த விவரங்கள் தேவைப்படுவோர் தங்களது பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களையோ அல்லது வேளாண் அலுவலர்களையோ அணுகலாம் என்றார் சி.முரளி

மண் வளம்… எப்போது கவலைப்படப்போகிறோம்?

விவசாயிகளைப் பொறுத்தவரை, மண் பயிர் வளர்வதற்கான ஓர் ஊடகம், அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, மண் பணத்தைக் கொட்டும் அமுதசுரபி. விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, மண் ஓர் ஆய்வுக்கூடம்.

மண் வளம்... எப்போது கவலைப்படப்போகிறோம்? #WorldSoilDay

ண்ணுக்கு உயிர் இருக்கிறது. இதைப் பற்றி நாம் என்றைக்காவது சிந்தித்து இருக்கிறோமா? தன்னுள் வந்து விழும் அனைத்தையும் மக்க வைக்கும் மண், விதையை மட்டும் எப்படி முளைக்க வைக்கிறது? ஊசி முனையளவு உள்ள விதையிலிருந்து மாபெரும் ஆலமரத்தை உருவாக்கும் வித்தையை மண்ணைத் தவிர யாராலும் செய்ய முடியாது. ஆனால், மனிதர்கள் மண்ணை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. அந்த மண்ணுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்தாலே இதை உணர்ந்துகொள்ள முடியும்.

இவன் என்னடா மண்ணு மாதிரி இருக்கான்’, உன் மண்டையில களிமண்தான் இருக்கு’ என சக மனிதர்களை ஏசுவதற்கு மண்ணை வம்புக்கு இழுக்கிறோம். ஆனால், மண்ணுக்குள் எத்தனை அறிவியல் புதைந்து கிடக்கிறது தெரியுமா? ஒரு கைப்பிடி மண்ணுக்குள் கோடிக்கணக்கான உயிர் பொருள்கள் இயங்கி வருகின்றன. ஒரு ஹெக்டேர் நிலத்திலுள்ள மேல் மண்ணில், 17 வகையான பூச்சிகள், 600 வகையான புழுக்கள், 1,500 வகையான பாக்டீரியாக்கள், 3,500 வகையான பூஞ்சைகள் இருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது அறிவியல்.

மண்

மண்,உலகுக்கு இயற்கை கொடுத்த அருட்கொடை. இப்பூவுலகில் நடக்கும் பெரும்பாலான மாற்றங்களுக்கு அடிப்படையாக இருப்பது மண்தான். மண் என்றால் காலுக்குக் கீழே கிடக்கும் தூசு என்பதுதான் பொதுப்புத்தி. ஆனால், அந்த மண்ணில் சின்ன மாற்றம் நடந்தாலும் உலகம் பெரும் துயரத்தைச் சந்திக்கும் என்பதை அவ்வப்போது மறந்து போகிறோம். விவசாயிகளைப் பொறுத்தவரை, மண் பயிர் வளர்வதற்கான ஓர் ஊடகம், அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, மண் பணத்தைக் கொட்டும் அமுதசுரபி. விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, மண் ஓர் ஆய்வுக்கூடம். இப்படி மண்ணை அவரவர்கள் வசதிக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்கிறோம். ஆனால், உயிருள்ள மண், கடந்த சில ஆண்டுகளாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் கிடப்பதைப் பற்றி யாருக்கும் அக்கறையில்லை.

பயிர் வளர வேண்டும். அதிக மகசூல் வேண்டும் என்ற உழவனின் எண்ணம் சரிதான். ஆனால், அதற்காகப் பொன் முட்டையிடும் வாத்தை அறுக்கலாமா? கடந்த 50 ஆண்டுகளாக நம் மண்ணின் மீது அதிக யுத்தம் நடத்தி வருபவர்கள் விவசாயிகள்தாம். ரசாயனம் என்ற பெயரில் மண்ணின் உயிர் தன்மையைச் சிதைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கு அவர்கள் மட்டுமே காரணமல்ல; அவர்களை அப்படிச் செய்யத்தூண்டிய பொய்யான பரப்புரைகள்தாம் காரணம். நாம் உண்ணும் உணவில் உப்பின் அளவு கூடினால் என்னவாகும்? அந்த உணவை வாயில் வைக்க முடியாதல்லவா? மண்ணும் அப்படித்தானே? அதன் மீது மூட்டை மூட்டையாக உப்பைக் (யூரியா) கொட்டும் போது மண்ணும் கரிக்கத்தானே செய்யும். மண்ணில் உள்ள உப்பு, மின்னாற்றலைக் கடத்தும் திறனை வைத்துத்தான் மண்ணின் வளத்தைத் தீர்மானிக்கிறார்கள். ஒரு டெசிசைமன் / மீட்டருக்குக் குறைவாக மின் ஆற்றலைக் கடத்தினால் அது வளமான மண். ஒன்று முதல் மூன்று டெசிசைமன் / மீட்டர் கடத்தினால் அது பரவாயில்லை ரகம். மூன்று டெசிசைமன் / மீட்டருக்கு அதிகமாகக் கடத்தினால் அது வளமில்லாத மண். அதில் சரியான மகசூல் கிடைக்காது. இந்த அறிவியலை விவசாயிகளுக்குத் தெளிவாகப் புரியவைக்கத் தவறிவிட்டார்கள் நம் வேளாண் விஞ்ஞானிகள். விளைவு, பொன் விளைந்த பூமியெல்லாம் புண்ணாகிக் கிடக்கிறது.

மண்வளம்

நிலத்தில் அதிகப்படியாகச் சேர்ந்து விட்ட உப்பைச் சமன்செய்ய அங்கக உரங்களால் மட்டுமே முடியும் என்பதை உலகமே ஒப்புக்கொண்டுள்ளது. அதனால்தான் பெரும்பாலான நாடுகள் இயற்கை விவசாயத்தைக் கைக்கொண்டுள்ளன. மண் வளத்தை விட, நோயுற்றுக் கிடக்கும் மண்ணின் நலனே முக்கியம் என்ற எண்ணம் சர்வதேச சமூகத்துக்கு வந்திருக்கிறது. அதனால்தான் தற்போது அங்கக இடுபொருள்கள், நுண்ணூட்டச் சத்துகள் என விவசாயிகளுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மண் நலத்தைக் காக்க வேண்டும் என்ற நோக்கில், ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 5-ம் தேதியைத் தேசிய மண் வள நாளாக அறிவித்துள்ளது மத்திய அரசு. 2015-ம் ஆண்டு முதல், டிசம்பர் 5 மண்வள தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மண் நலனைப் பற்றிச் சிந்திக்கும், இந்நாளில் இருந்தாவது மண்ணின் வளத்தை, நலத்தைக் காப்போம் என்ற உறுதியை ஏற்போம். அதன் முதல்படியாக ரசாயனங்களை மண்மீது கொட்டுவதை தவிர்ப்போம்.

மரபணு மாற்றப் பயிர்கள் தோல்வியுற்றன!

மரபணு மாற்றப் பயிர்கள் தோல்வியுற்றன!

இந்தியாவில் பி.டி பருத்தி உள்ளிட்ட மரபணு மாற்ற பயிர்கள் தோல்வியுற்றுவிட்டதாக வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன் துணை ஆசிரியராக பணியாற்றி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்று அண்மையில் வெளியாகியது. இந்த அறிக்கை பி.டி பருத்தி பயிர் தோல்வியுற்றது என்று தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை குறித்து மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரான கே.விஜயராகவன் விமர்சித்துள்ளார்.

இந்த ஆய்வறிக்கையில் இந்தியாவில் பயிர் மேம்பாடு, மரபணு மாற்றப் பயிர்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக பி.டி பருத்தி, பி.டி கத்திரிக்காய், டி.எம்.ஹெச்-11, மரபணு மாற்ற கடுகு ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், “இந்தியாவில் மரபணு மாற்ற பருத்தி தோல்வியுற்றுவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வேளாண் தொழில்நுட்பமாகவும் அது தோற்றுவிட்டது. பருத்தி விவசாயிகளுக்கு வாழ்வாதார பாதுகாப்பு அளிக்கவும் அது தோற்றுவிட்டது. இவர்களில் பலர் சிறு, குறு விவசாயிகளாகவே உள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை முழுவதும் தவறுகள் நிறைந்திருப்பதாக முதன்மை அறிவியல் ஆலோசகரான விஜயராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். இந்தியாவின் பசுமைப் புரட்சிக்குத் தலைமை வகித்ததாகக் கூறப்படும் எம்.எஸ்.சுவாமிநாதனே மரபணு மாற்றப் பயிர்களின் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

நைட்ரஜன் ஆபத்து!

ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் பிரான்டியர்ஸ் அறிக்கை என்கிற சுற்றுச்சூழல் அறிக்கை ஒன்றை வெளியிடுகிறது. 2019-ஆம் ஆண்டுக்கான பிரான்டியர்ஸ் அறிக்கையில் நைட்ரஜன் மாசு குறித்து ஒரு தனிப் பகுதியே அதில் சேர்க்கப்பட்டிருப்பது எந்த அளவுக்கு நைட்ரஜன் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துரைக்கிறது.
நைரோபியில் கடந்த மார்ச் 4-ஆம் தேதி ஐ.நா.வின் சுற்றுச்சூழல் அவை வெளியிட்டிருக்கும் பிரான்டியர்ஸ் அறிக்கை சர்வதேச அளவிலான வேளாண் ஆய்வாளர்களையும், சூழல் ஆய்வாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. விலங்கின வளர்ப்பு, விவசாயம், போக்குவரத்து, தொழிற்சாலைகள், எரிசக்தித் துறை ஆகியவற்றின் வளர்ச்சி நைட்ரஜன் சார்ந்த வேதியியல் பொருள்களின் பயன்பாட்டு அளவை மிக அதிகமாக உயர்த்தியிருப்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
நைட்ரஜனை ஆதாரமாகக் கொண்ட அமோனியா, நைட்ரேட், நைட்ரிக் ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகியவை நமது சூழலியலில் கலந்து சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாமல், நேரிடையாகவே மனித இனத்துக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருவது இப்போது கண்டறியப்பட்டிருக்கிறது. இது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது மிகப் பெரிய பிரச்னையாக மாறக்கூடும் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
நைட்ரஜன் சார்ந்த வேதியியல் பொருள்கள் மனித இனத்துக்கு நினைத்துப் பார்க்க முடியாத பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். கரியமில வாயுவைவிட 300 மடங்கு வீரியம் உள்ள பசுமையில்ல வாயுவை நைட்ரஜன் சார்ந்த வேதியியல் வாயுக்கள் ஏற்படுத்தும். பிரான்டியர்ஸ் அறிக்கையின்படி உலகின் சூழலியலுக்கும், சுகாதாரத் துறைக்கும் நைட்ரஜன் மாசால் ஏற்படுத்தப்படும் பாதிப்பின் அளவு 340 பில்லியன் டாலரைவிட (ரூ.24 லட்சம் கோடி)அதிகம். இத்தனை நாளும் இது குறித்த தீவிரமான கவலையோ, இதை எதிர்கொள்ளும் முயற்சியோ எடுக்காமல் இருந்துவிட்டது மனித இனத்தின் மிகப் பெரிய தவறு என்று 2019-க்கான பிரான்டியர்ஸ் அறிக்கை வெளிவந்த பிறகுதான் தெரிய வந்திருக்கிறது.
உலகில் வாழும் உயிரினங்களுக்கெல்லாம் நைட்ரஜன் என்பது மிக முக்கியமான வேதியியல் பொருள். புரதம் உள்ளிட்ட மனித உடலுக்குத் தேவையான உயிரி வேதியியல் பொருள்களில் இன்றியமையாததாக நைட்ரஜன் திகழ்கிறது. அதே நேரத்தில் ரசாயன உரம், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஆகியவற்றில் நைட்ரஜனின் அதிகப்படியான பயன்பாடு மோசமான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். அதனால்தான் இன்டர்நேஷனல் நைட்ரஜன் இனிஷியேட்டிவ் என்கிற அமைப்பின் இப்போதைய தலைவரான இந்தியாவைச் சேர்ந்த ரகுராம் உள்ளிட்ட விஞ்ஞானிகள் நைட்ரஜனை புதிய கரியமிலம் என்று குறிப்பிடுகிறார்கள். அவர்கள் சர்வதேச அளவில் நைட்ரஜனையும், கார்பனையும் (கரியமிலம்) ஒரேபோல எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.
அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கும் அடுத்தபடியாக ரகுராமின் தலைமையில் இந்திய விஞ்ஞானிகள் நைட்ரஜனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மிகப் பெரிய ஆய்வை நடத்தி வருகின்றனர். 2017-ஆம் ஆண்டு முதல் இந்திய விஞ்ஞானிகளால் நடத்தப்படும் ஆய்வுகள் குறித்து பிரான்டியர்ஸ் அறிக்கை யில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. விஞ்ஞானிகள் வட்டத்தைக் கடந்து நைட்ரஜன் குறித்த விழிப்புணர்வு தெரியாமலும், அங்கீகரிக்கப்படாமலும் இருப்பது, அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்திய நைட்ரஜன் மதிப்பீடு என்கிற ஆய்வறிக்கையை ரகுராம் தலைமையிலான விஞ்ஞானிகள் வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள். அதன்படி, இந்தியாவில் நைட்ரஜன் மாசு ஏற்பட மிக முக்கியமான காரணம் விவசாயம் என்பது அவர்களால் சுட்டிக்காட்டப் பட்டிருக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை சுமார் 3.7 கோடி ஹெக்டேர் அளவில் நெல்லும், 2.7 கோடி ஹெக்டேர் அளவில் கோதுமையும் பயிரிடப்படுகின்றன. இந்தியாவின் மொத்த சாகுபடி பரப்பில் பெரும்பான்மைப் பகுதியை நெல்லும், கோதுமையும்தான் பங்குபோட்டுக் கொள்கின்றன.
நெல், கோதுமை சாகுபடியில் அதிகமான அளவு நைட்ரஜன் சார்ந்த ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய ரசாயன உர உற்பத்தியாளர்கள் சங்கத்தின் புள்ளிவிவரப்படி, ஆண்டுதோறும் சுமார் 1.7 கோடி டன் நைட்ரஜன் சார்ந்த ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் நெல், கோதுமை ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படும் உரங்களிலுள்ள 33% நைட்ரஜன் மட்டுமே நைட்ரேட்டுகளாக அந்தப் பயிர்களால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மீதமுள்ள 67% நைட்ரஜன் பூமியில் தங்கிவிடுகிறது. அது சுற்றிலுமுள்ள பகுதிகளை மாசுபடுத்தி அதனால் சுற்றுச்சூழலுக்கும், சுகாதாரத்துக்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை இந்திய நைட்ரஜன் மதிப்பீடு சுட்டிக் காட்டியிருக்கிறது.
ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் அவையில் இந்திய அரசு நைட்ரஜன் மாசு குறித்து தீர்மானம் ஒன்றை வரும் மார்ச் 11-ஆம் தேதி கொண்டுவர இருக்கிறது. இதுவரை இந்தியா இதுபோன்ற முக்கியமான எந்தத் தீர்மானத்தையும் வலியுறுத்தியதில்லை என்பதிலிருந்து இந்தத் தீர்மானத்தின் முக்கியத்துவம் உணரப்படுகிறது.
இந்தியாவின் இந்தத் தீர்மானத்துக்கு பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. சர்வதேச அளவில் இந்தத் தீர்மானம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பவளப் பாறைகள், பசுமைக் காடுகள், நீர்வாழ் உயிரினங்கள், நீர்நிலைகள் என்று பரவலான பாதிப்பை நைட்ரஜன் மாசு ஏற்படுத்திவரும் நிலையில், இதை எதிர்கொள்ள மனித இனம் முனைப்புடன் செயல்பட்டாக வேண்டும். நைட்ரஜனால் ஏற்படும் நன்மைகளும், அதே நேரத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் மாசும் கொள்கை அளவில் ஆய்வு செய்யப்பட்டு, சர்வதேச அளவில் நைட்ரஜன் குறித்த விவாதம் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும்.

நிலத்தையும் மனிதனையும் காப்பாற்றும் இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயத்தை அரசு ஊக்குவித்தால், பேச்சுவழக்கில் உள்ள இயற்கை விவசாயம், எதிர்காலத்தில் நிலத்தையும் மனித உடல் ஆரோக்கியத்தையும் நிச்சயம் காப்பாற்றும் என்று நெல் திருவிழாவில் விவசாயிகள் தெரிவித்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் கிராமத்தில் கடந்த 4, 5-ம் தேதிகளில் ‘நமது நெல்லைக் காப்போம்’ என்ற பாரம்பரிய நெல் திருவிழா கிரியேட் அமைப்பு சார்பில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் கேரளம், தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

விவசாயம் காப்பாற்றும்

“திருமணத்துக்கு முன்பு மாப்பிள்ளை சம்பாவும், திருமணத்துக்குப் பிறகு கவுனிஅரிசியும், மகப்பேற்றின்போது பூங்காரும், குழந்தை பிறந்த பிறகு பால்குடவாரையும், பிறந்த குழந்தைக்குச் சாதம் ஊட்ட வாரன்சம்பா என மருத்துவக் குணம் நிறைந்த பாரம்பரிய நெல் வகைகள் தமிழகத்தில் நீண்டகாலமாகப் பயிரிடப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் அதிக மகசூல் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் ரசாயன உரங்கள் வந்ததால், பாரம்பரிய ரகங்கள் அழிந்தன. இதுவரை 156 நெல் ரகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இது 10-வது ஆண்டு நெல் திருவிழா. இந்த விழாவை மத்திய, மாநில அரசுகளே நடத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். அதேபோல் ரசாயன உரங்களுக்கு வழங்கும் மானியத்தைப்போல், இயற்கை சாகுபடிக்கும் மானியம் வழங்க வேண்டும்” என்றார் நெல் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன்.

விவசாயிகள் தீர்மானிப்பார்களா?

காந்தி கிராமப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மார்க்கண்டன்:

நம்முடைய முன்னோர்கள் மேற்கொண்டது இயற்கை விவசாயம்தான். காலப்போக்கில் அறிவியல் வளர்ச்சியின் காரணமாகவும், உணவு பற்றாக்குறை காரணமாக அதிக விளைச்சலைப் பெற ரசாயன உரங்கள் விஞ்ஞானிகளால் புகுத்தப்பட்டன. இதனால் நிலத்தின் வளம் கெட்டது மட்டுமல்லாமல், மனித உடல்நலமும் கெட்டது.

இயற்கை விவசாயத்தில் விளைவிக்கக்கூடிய பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் இப்போது விவசாயிகள் அவதிப்படுகின்றனர். மத்திய, மாநில அரசுகள் இது குறித்துச் சிந்திக்க வேண்டும். வட்டார அளவில் சந்தைகளை உருவாக்க வேண்டும். அதேபோல் விவசாயிகள் விளைவித்த தானியங்களுக்கான விலையை விவசாயிகளே தீர்மானிக்க வேண்டும். அரசு அதிகாரிகள் விலையை நிர்ணயிக்கக்கூடிய சூழல் மாற வேண்டும்.

பூச்சிக்கொல்லியைக் கட்டுப்படுத்துவோம்

திருவனந்தபுரம் நமது நெல்லைக் காப்போம் அமைப்பின் ஸ்ரீதர்:

பூச்சிக்கொல்லி என்றைக்கு இங்கே புகுந்ததோ, அன்றே மனிதக் குலத்தில் வியாதிகள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. தமிழக விவசாயிகள் அளவுக்கு அதிகமாகப் பூச்சிக்கொல்லியைத் தெளிப்பதால்தான், தமிழகக் காய்கறிகளை வாங்குவதற்குக் கேரளத்தில் யோசிக்கின்றனர். இதை அரசு கண்காணிக்க வேண்டும். ரசாயன உரங்களின் வரவால்தான் மனிதர்களுக்கு அதிக நோய்கள் வருகின்றன. இதைத் தவிர்க்க விவசாயிகளால் மட்டும்தான் முடியும். ஆரோக்கியமான சமுதாயத்தைப் படைக்க விவசாயிகள் முன்வருகின்றனர். விவசாயத்தையும் சமுதாயத்தையும் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் பூச்சிக்கொல்லியை கட்டுப்படுத்த வேண்டும்.

இயற்கை கைவிடாது

கிரியேட் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ஆர். பொன்னம்பலம்:

ரசாயன உரங்களால் அதிகம் பாதிக்கப்பட்டது பறவை இனங்கள்தான். மனிதர்கள் எந்த அளவுக்குப் பாதிப்பை அனுபவித்து வருகிறார்களோ, அதைவிட மோசமாகப் பறவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நெல் மணிகளை விரும்பி உட்கொள்ளும் சிட்டுக்குருவி நகர்ப்புறங்களில் இருந்து காணாமல் போய்விட்டது. அதேபோல் தானியங்களை உட்கொள்ளும் அணிலும் வெகுவாகக் குறைந்துவருகிறது. இதற்கெல்லாம் ரசாயன உரங்களே முக்கியக் காரணம். ரசாயன உரத்தைப் பயன்படுத்துவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிட்டு இயற்கைக்கு மாறினால், விவசாயிகளை இயற்கை கைவிடாது.

நிலத்தை நலமாக்குவோம்

வேளாண் அலுவலர் பூச்சி நீ. செல்வம்:

இந்தியாவில் 22,292 பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்ததாகக் குறிப்பு உள்ளது. ரசாயன உரங்களின் வரவால் இவற்றையெல்லாம் இழந்துவிட்டோம். மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதால், மண்ணில் ரசாயனத்தைப் பயன்படுத்தத் தொடங்கினோம். அதனால் பாரம்பரிய, மருத்துவக் குணம் வாய்ந்த நெல் வகைகளை இழந்து விட்டோம்.

மண்ணின் வளத்தைக் காப்பாற்றியாக வேண்டிய தருணத்தில் உள்ளோம். இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டுமானால் கோடைமழையில் நிலத்தை உழுது நவதானியங்களை விதைத்து, பூக்கும் தருணத்தில் அதை மீண்டும் உழுது இயற்கை விவசாயத்தைத் தொடங்க வேண்டும். அப்போதுதான் மண் வளமாக இருக்கும். நிலத்தை வளமாக்குவதைக் காட்டிலும் நலமாக மாற்றினாலே போதும். விவசாயம் செழிக்கும்.

விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்

சலுகைகள்

  • தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தரமானச் சான்று பெற்ற நெல் விதைகள் ஒரு கிலோவுக்கு ரூ. 10 மானிய விலையில் வழங்கப்படுகிறது.
  • இதுதவிர, விவசாயக் கூலித் தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக இயந்திரமயமாக்குதலை ஊக்குவிக்கும் வகையில் நடவு இயந்திரம் கொண்டு நெல் நடவு செய்பவர்களுக்கு ஓர் ஏக்கருக்கு ரூ. ஆயிரத்து 500 மானியம் வழங்கப்படுகிறது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர பயிர் விதைகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.
  • விதைக் கிராமத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தரமான விதைகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்ள விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • மேலும் அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 20 கிலோ நெல் விதைகளும், 8 கிலோ பயறு வகை விதைகளும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம்

  • இந்தத் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் உயிர் உரங்கள் வழங்கப்படுகின்றன.
  • வயலுக்கு நீர் கொண்டு செல்லும் குழாய்களும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. சூரிய சக்தியில் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க ரூ.3 லட்சத்து 35 ஆயிரத்து 200 முதல் ரூ.3 லட்சத்து 84 ஆயிரத்து 400 வரை மானியம் வழங்கப்படுகிறது.

அட்மா திட்டம்

  • அட்மா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளிகள், திறன் வளர் பயிற்சிகள், விவசாயிகள் கண்டுணர சுற்றுலா, செயல் விளக்கத் திடல் அமைத்து விவசாயிகளுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
  • மேலும், இதில் சிறந்த விவசாயி ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்படுகிறது.

விவசாய சந்தேகங்களை விளக்கும் தொடுதிரை மையம்

மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் வேளாண் தொடுதிரை மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த தொடுதிரையை செயல்படுத்த தொடங்கியவுடன் கீரைகள், தானியங்கள், பணப்பயிர்கள், பயறு வகைகள், காய்கள், மலர்கள் உள்ளிட்டவற்றின் பெயர்கள் வருகின்றன. பின்னர் அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்தவுடன் அவற்றில் உள்ள வகைகள் குறித்த விவரங்கள் வெளியாகின்றன.

எடுத்துக்காட்டாக, கீரையை தேர்வு செய்தால் அதில் சிறுகீரை, பசலைக்கீரை, அகத்திக்கீரை, லெச்சகெட்டான் கீரை, கொத்தமல்லி கீரை, பாலக்கீரை, அகத்திக்கீரை, மணத்தக்காளி கீரை, பருப்புக்கீரை, புதினா, கருவேப்பிலை போன்ற கீரைகளின் வகைகள் உள்ளன.

அதில் ஏதாவது ஒரு கீரையை தேர்வு செய்தால் அந்த கீரையை பயிர் செய்ய எவ்வளவு நிலம் தேவைப்படும், அந்த இடத்தில் எவ்வாறு பயிர் செய்வது, நோய்கள் தாக்காமல் பாதுகாக்க என்னென்ன செய்ய வேண்டும், எவ்வாறு பராமரிப்பது, எத்தனை நாட்களில் அறுவடை செய்வது போன்ற தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதேபோல, தானியங்கள், பயறு வகைகள், காய்கள் உள்ளிட்டவை குறித்தும், அவற்றை பராமரிக்கும் முறைகள் குறித்தும் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு 17 அமைப்புகளை சேர்ந்த 650 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களுக்கு விவசாயத்தில் ஏற்படும் சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்காக இந்த மையம் செயல்பட்டு வருகிறது.

விவசாயிகள் பயன்பெறும் வகையில், விவசாயம் குறித்த பொது தகவல்கள், வங்கியில் கடன் பெறும் முறைகள் குறித்து இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை விவசாயிகள் பாதுகாத்து விவசாயத்தை லாபகரமாக செய்வதற்கே இந்த மையம் செயல்பட்டு வருகின்றது

ஆதாரம் : அருப்பே கொள்கை ஆய்வு மையம்